புதன், மார்ச் 02, 2011

நண்பனின் இழப்பு பேரிழப்பு!

வாழ்க்கை பல இன்னல்கள்,இடையூறுகளை தாண்டி பயணிக்க வேண்டிய ஒரு
பாய் மரக்கப்பல் போன்றது,எல்லாவற்றையும் தாண்டி வந்த பிறகும் கூட மனிதன்
நிம்மதியாக வாழ முடிவதில்லை,காரணம் அவனது நேசங்களின் பிரிவு.
பிரிந்தோர் இணைந்து விடலாம் என்ற நம்பிக்கை உண்டு,ஆனால் இழந்தோரை
எண்ணி எண்ணி மனம் படும் பாடு பெரும்பாடு.
இந்த இழப்புக்களிலே நண்பர்களின் இழப்பும் பெரும் துன்பத்தை ஏற்படுத்தி விடுகிறது.
நாம் எந்த இரகசியத்தையும் நண்பர்களிடத்தில் மறைப்பதில்லை,ஆறுதல் தேடிச்செல்லும்
ஆலயம் நண்பர்கள் என்றுதான் நான் சொல்வேன்.அந்த வகையிலே கொழும்பில் நான்
வசித்தபோது எனக்கு மிகவும் ஆறுதலாகவும்,உதவியாகவும் இருந்தவர் அன்பு நண்பர்
"தாஸ்"இருந்தாலும் அவருடனான தொடர்புகள் எனக்கு இல்லாமலிருந்தது.ஆனால்
பெரும் துயர் என்னவென்றால் இன்று எனது நண்பியொருவருடன் தொடர்பு கொண்டபோது
அவர் சொன்ன விடையம் என்னை கலங்கடித்தது,உங்கள் நண்பர் தாஸ் இறந்து விட்டார்
என்றும் இப்போ ஒருவருடம் இருக்கும் என்று நண்பி சொன்னபோது என்னால் தாங்கிக்
கொள்ளவே முடியவில்லை.சில நேரங்களில் பண உதவி கூட செய்திருக்கிறார்.
என்னில் அவரது குடும்பமே மிகவும் நம்பிக்கையுடையதாக விளங்கியது என்னால்
மறக்க முடியாதது.சில நேரங்களில் எனக்கு சொல்வார் "டேய் நேற்று எனக்கு செலவுக்கு
காசில்லை,மனிஷியிட்ட கேட்டால் தரமாட்டா,அதால உனக்கு என்று சொல்லிக்கேட்டன்
தந்திற்றாடா!இப்ப அடிக்கடி உன்ர பேரை சொல்லித்தான் மனுஷியிட்ட காசு வாங்கிறன்,
உனக்கென்று சொன்னா ஒன்றும் கதைக்காமல் தந்திருவா"நான் அவரை ஏசினேன் ஏன்
இப்படிச்செய்றீங்கள்?பிறகு என்னையெல்லோ தப்பா நினைப்பா என்றேன்,"சீ அப்படி
ஒன்றும் நினைக்க மாட்டா"என்றார் தாஸ்.
எனக்கு மிகவும் உதவியாக இருந்த நண்பனின் தொடர்பு இன்றிப்போனதும்,இப்போ
கிடைத்த அவரது பிரிவுச்செய்தியும் எனக்கு பெரும் துயரச்செய்தியே!
மானிப்பாயை சேர்ந்த தாஸ்,ஊர்காவற்றுறையைச் சேர்ந்தவரை மணம் முடித்திருந்தார்.
அவரது இழப்பு என்றென்றும் சுமைகளே!