ஞாயிறு, அக்டோபர் 30, 2011

இதயம் கனக்க அஞ்சலிக்கின்றோம்!

வேலணை கிழக்கை பிறப்பிடமாகவும் கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி தியாகராசா இராசலட்சுமி அவர்கள் 28-10-2011 அன்று (வெள்ளிக்கிழமை)காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.மிகுந்த பரிவும் இரக்க சுபாவமும் கொண்டவரான தாயார் எல்லோருக்கும் உதவும் பண்புடையவர் மட்டுமன்றி,தனது இல்லம் நாடி வருபவர்களை அனுசரித்து உபசரித்து அனுப்பும் பாங்கு கொண்டவர்.தீவகத்திலே வேலணை,புங்குடுதீவு ஆகிய பகுதிகளில் வெதுப்பகங்கள் நடாத்தி மக்கள் பசி போக்கியவர்.உரிமையுடன் வந்து அறிவுரை சொல்லி ஆறுதல் வார்த்தைகளால் மனம் மகிழ செய்பவர்.இந்த தாயாரின் இழப்பால் வாடி நிற்கும் அதே வேளை அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆறுதல்களை தெரிவித்து, அவரது புனித ஆத்மா இறையடி நிழலில் அமைதி பெற வேண்டி அஞ்சலிக்கின்றோம்!

ஞாயிறு, அக்டோபர் 09, 2011

நினைவுகளை நிலைக்க வைத்தவர்!

என்றும் மறக்க முடியாத பல நன்மைகள் புரிந்து மக்கள் மனதில் நினைவுகளை நிலைக்க வைத்தவர்கள் பலர்,அந்த பலரில் ஒருவராக எம் மனதில் நிலைத்து விட்டவர் என்.ஆர்.என யாவராலும் அறியப்பட்ட திரு, நாகலிங்கம் இரத்தினம் அவர்கள்!புளியங்கூடல் ஸ்ரீ மகாமாரி அம்பாள் மீது தீராத பக்திகொண்டு சேவை புரிந்தவர்.நல்ல பண்பும் இரக்ககுணமும் கொண்டவர்.உதவி என்று வருவோர்க்கு முடிந்தளவு உதவிகளை செய்ய பின்னிற்காத மனிதர் அவர்.புளியங்கூடல் வேலணை என்ற கிராமங்களை இணைக்கும் பாலமாக விளங்குகிறது அவரது இல்லம்.அவர் நம்மிடையே இன்று இல்லை என்று நினைக்க தோன்றவில்லை! அவரது பண்புகள் அவரை நிலைக்க வைத்திருக்கிறது என்பதே உண்மை!உலகுள்ளவரை அவரது நினைவுகளும் வாழும்.

சனி, அக்டோபர் 01, 2011

நீ வீழவில்லை அண்ணா என் மனதில் வாழ்கிறாய்!

ஓ.....மரணம் வாசல்தேடி வருமுன்னே
மரணத்தின் வாசல் கதவை தட்டியவனே!
அண்ணணே.....................
என் வாழ்விற்கு ஒளியூட்டிய வழிகாட்டியே!
வாடாமலர் போல வாழ்ந்து புகழ் எடுக்க
போடா தம்பியென்று புயம் கொடுத்து தூக்கியவனே!
அந்த நாள் ஞாபகத்தை அடிமனதில் சுமந்து கொண்டு
வெந்தணலில் வீழ்ந்து விட்ட புழுவாகி துடிக்கின்றேன்!
மூத்தவனாய் குடும்பத்தை முன்னின்று காத்தவன் நீ!
நோய்கள்,துன்பங்கள் பாடாய் படுத்தியபோதெல்லாம்
பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் எழுந்தவன் நீ!
அரச பதவியில் அறுபதுகளில் இணைந்து கொண்டு
குடும்ப விளக்கை குன்றின்மேல் ஏற்றியவன் நீ!
ஒடுக்கு முறைகளை ஒதுக்கி புறம்தள்ளி
மிடுக்காய் நடந்து எம்மை மேன்நிலை படுத்தியவன் நீ!
பணந்தான் உலகென்று பதறியடிக்கும் உறவுக்குள்ளே
குணந்தான் பெரிதென்று குரல் கொடுத்த குணாளன் நீ!
எப்படியும் வாழலாம் என்பதை விடுத்திங்கு
இப்படித்தான் வாழவேண்டுமென வீறாப்பு கொண்டவன் நீ!
என் ஆருயிர் அண்ணாவே...................!!!
நெஞ்சில் ஈரம் இருந்தும் கடைசிவரை அழுதுவிட
என் கண்களில் ஈரமில்லையே.......
நீ வீழ்ந்தாய் என்றாலும்,
இறுதிவரை என் நெஞ்சில் வாழ்வாய் நான் வீழும்வரை.
(திரு.வீரகத்தி நாகமுத்து அவர்களின் மறைவையொட்டி,அவரின் நினைவாக இது பிரசுரமாகிறது)
ஆக்கம்:(சகோதரர்)வீ.குமரன் ஆசிரியர்.