வியாழன், நவம்பர் 04, 2010

இரண்டாம் ஆண்டு துயர் சுமந்த நினைவுகள்!


சுழிபுரத்தை பிறப்பிடமாகவும்,வாழ்விடமாகவும் கொண்டிருந்த திருவாளர்
நாகலிங்கம் அரியகுட்டி அவர்களின் இரண்டாம் ஆண்டு துயர் சுமந்த நினைவுகள்!
12-11-2008 ல் எமை விட்டுப்பிரிந்த எமது அன்புத்தந்தையின் நினைவுகளால்
நாளெல்லாம் வேதனையில் தவித்துக்கொண்டிருக்கிறோம்,தந்தையே ஆண்டிரண்டென்ன,நூறுகள் கடந்தாலும் எம் உயிர் உள்ளவரை உங்கள் நினைவுகள் எம் நெஞ்சமதில் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும்.எம்மை பூமிக்கு கொண்டுவந்த நீங்கள்,பூமியை விட்டு சென்றதுதான் ஏனோ?தவிக்கின்றோம் தந்தையே!எம் மனங்கள் இனி எப்போதும் ஆறாது!உங்கள் ஒவ்வொரு செயலும் எம் மனத்திரையில் படமாக ஓடிக்கொண்டே இருக்கிறது!எம் மனம் வாடிக்கொண்டேயிருக்கிறது!என்றென்றும் உங்கள் நினைவுகளுடன்,உங்கள் குடும்பத்தினர்கள்.

சனி, செப்டம்பர் 25, 2010

பாவலர் சத்தியசீலன்.

பாவலர் சத்தியசீலன் அவர்களுடன் ஒருசில மாதங்களே பழகி
இருந்தாலும்,அந்த நாட்கள் அத்தனையும் விலைமதிக்க முடியாத
நாட்கள் என்றே கூறலாம்.அவரது பேச்சிலே எப்பொழுதும்
கவிநயம் தவழ்வதை காணமுடியும்,நகைச்சுவை ததும்ப அவர்
பேசும் பேச்சு இவை எல்லாம் மனக்கண் முன் அப்படியே இன்னும்
நினைவில் நிழலாடுகின்றது.
ஒரு அற்புதமான மனிதரை நாம் இழந்து ஆண்டுகள் சில கழிந்து
விட்டபோதும் அவரின் பிரிவை நான் அறிந்திருக்கவில்லை,இப்போ
தற்செயலாக அல்லைப்பிட்டி இணையத்தை பார்த்தபோது நான்
அதிர்ந்தே விட்டேன்,
எனது(ஆட்டோ கிராப்)ஞாபகப்பதிவேட்டில் அவரது பதிவையும் இடுமாறு
நான் சொன்னபோது அவர் எழுதிய வார்த்தைகள்"ஞாயிறு வேந்தன் உந்தன்
நற்றமிழ் வெல்க"என்ற வாசகம் என்மனவேட்டிலும் பதிந்து விட்ட ஒன்று.
நான் புதுக்கவிதை எழுதும் ஒரு சாதாரணமானவன்.ஆனால் பெயர் வாங்கும்
அளவிற்கு எதையும் செய்தவன் இல்லை,இருந்தாலும் பாவலர் சத்திய சீலன்
அவர்கள் என்னை கவிஞர் என்றே அழைப்பார்,பெருமை இல்லாதவர்
அதனால் தானோ என்னவோ யாழ்,புத்திசாலிகள் அவரை பெருமைப்படுத்த
தவறி விட்டார்கள்,
நான் அவருக்கு மகன் மாதிரி இருந்தபோதும் அதையெல்லாம் விட்டு
தனது பள்ளிப்பருவ காதல் கதைகளையெல்லாம் மிகவும் நகைச்சுவையாக
சொல்லிய விதம்,நாங்கள் சிரித்த சிரிப்புக்கள் இன்னும் மனக்கண் முன்னே
நீண்டு விரிந்துகொண்டு செல்கிறது.
அவரை தனியாக காண்பதிலும் காரைநகர் மதுரகவி எம்,பி,அருளானந்தம்
அவர்களுடன் காண்பதே அதிகம்,அந்தளவிற்கு இருவரும் ஒற்றுமையுடன்
விளங்கினார்கள்.
பாவலர் சத்தியசீலன் அவர்கள் என் மனதுள்ளவரை நினைவில் மறையாமல் வாழ்வார்.

ஞாயிறு, செப்டம்பர் 12, 2010

மனதோடு நிற்பவள்!

நம் வாழ்வில் பல புது முகங்கள் அறிமுகமாகிறார்கள்,
அதில் சிலர் எம் அகம் புகுந்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள்,
அப்படி என் அகம் எங்கும் பரந்து வாழ்ந்து கொண்டிருக்கும்
ஒருவர்தான் சுபோ என்கிற சுபோஜினி!
மிகவும் அழகானவர்,அவரது அழகுக்கு ஏற்றாற்போல்
மனதும் அழகானதுதான்.நான் துயரில் வாடிய ஒரு காலம்,
அந்த நேரத்தில் எனக்கு நண்பியாய் அறிமுகமானவர்தான் சுபோ.
நாங்கள் பழகிய நாட்கள் மிகவும் பொன்னான நாட்கள் என்றே
கூறலாம்,அப்படி ஒரு மகிழ்வை தந்த நாட்கள் அவை.
கொழும்பு மேபில்ட் வீதியில் சுபோ வசித்து வந்தார்.
அவவினுடைய பேச்சு,தன்னடக்கம் எல்லாமே எனக்கு
பிடித்திருந்தது.என்னை புது மனிதனாக மாற்றிய அந்தப்
பேதைக்கு நான் என்றுமே நன்றிக்கடன் உடையவன்.
நாம் வேலை பார்த்த தினக்குரல் அச்சகத்தில் எம் தேசியத்தலைவர்
அவர்களின் பிறந்த நாளுக்கு நான் எல்லோருக்கும் ரொபி
கொடுத்தபோது எதற்கு ரொபியென அங்குள்ளவர்கள்
கேட்டபோது சட்டென இன்று அவருடைய பிறந்த நாள் என்று
சொல்லி சமாளித்த விதம் இன்றும் என் மனதில் அப்படியே
நிற்கிறது.எனது பிறந்த நாள் அன்று சுபோவின் பரீட்சை
பெறு பேறுகள் கிடைத்திருப்பதாக கூறி கேக் கொடுத்தபோது
நான் வேண்டுமென்றே என்ன விஷேசம் சுபோ எனக்கேட்க
அதற்கு,ரிஷல்ட் வந்திருக்காம் என்று மனேச்சர் சொல்ல
என்னை கடைக்கண்களால் சுபோ முறைத்ததும் இன்றும்
பசுமையாய் என் மனதின் உள்ளே மிதக்கிறது.
சிங்கள மொழிபேசும் பெண்ணான ஷாலிகா என்னுடன்
அன்பாகப் பழகும் ஒருவர்,நானும் சுபோவும் அதிகம்
பேசிக்கொள்வதால்,ஷாலிகாவுடன் பேசுவது குறைவாகவே
இருந்தது.இதனால் அடிக்கடி உங்களுக்கு இப்ப லெவல்
என்னோட கதைப்பதே இல்லை என்று ஷாலிகா கூறுவார்.
ஆனாலும் நாங்கள் மூவரும் சுபோ வீட்டில் சந்தித்து பேசுவோம்.
இன்று இவர்களுடைய தொடர்புகள் அற்ற நிலையிலும்
மனம் அவர்களை சுமந்தே வாழ்கிறது.
மீண்டும் நாம் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன்.

சனி, செப்டம்பர் 11, 2010

அன்பானவளிடம் இருந்து அழைப்பு!


Hollo!யார் பேசுறீங்க?
என்ன குரல் மறந்துபோச்சா?
கேட்ட குரல் மாதிரி இருக்கு ஆனா ஞாபகம் வரல்லை.
நான் அருளி பேசுறேன்,எப்படி இருக்கிறீங்க?
அடடா நீங்களா?பரவாயில்லையே சுகம் எல்லாம் விசாரிக்கிறீங்க.
என்ன கோபம் போல இருக்கு?
இல்லை,இல்லை கோபம் ஏன் வரப்போகுது?கோவிச்சுத்தான்
என்னாகப்போகுது?
உங்கட காதல் விளையாட்டுக்கு ஒருத்தன்,கல்யாணம் பண்ண ஒருத்தன்!
நீங்க புரிஞ்சுக்கவே மாட்டீங்களா?விதி அப்படியாப்போச்சு!
செய்யிறதையும் செஞ்சிட்டு விதிமேல பழியை போட்டுருவீங்களே!
ஓகே,ஓகே,நான் செய்தது பிழைதான் அதுக்கு மன்னிப்பே கிடையாதா?
ஐயையோ!நீங்க ஏன் மன்னிப்பு கேக்கணும் நான் எல்லோ உங்களை
நம்பி தொலைச்சிட்டன்,ஒரு பெண்ணின் மனசை கஷ்ரப்படுத்தக் கூடாது
என்று நினைச்சன்,ஆனா நீங்க துரோ.......சீசீசீ அதை ஏன் இப்ப!
சரிடா!உங்களை மறந்தா இப்ப போன் பண்ணுவனா?ஏதோ நாங்க நினைச்சது
நடக்காமல் போச்சு இனி போனிலையாவது இணைஞ்சிருப்போமே!
இது கதைக்கு வேணுமென்றா நல்லா இருக்கும்,வாழ்க்கைக்கு சரிவராது,
உங்களை நம்மி வந்து தாலிகட்டியிருக்கிறானே ஒருத்தன் அவன்ர மனசை
கஷ்ரப்படாமல் பார்த்துக்கோங்க அதுவே போதும்.
அவரை நல்லபடியாத்தான் பார்த்துக்கிறேன்,அதில ஒரு குறைச்சலும் இல்லை.
அதுவே போதும்,நீங்க என்னை பிரிஞ்சது கவலையானாலும் சந்தோஷமா இருக்கிறீங்களே
என்றாவது நான் நிம்மதியாய் இருப்பேன்.
அதுசரி இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க?
ஆங்..இப்ப சும்மா என்ர வாயை கிளராதீங்க!
சரி,சரி இப்ப அவர் வரும் நேரமாச்சு,நான் பிறகு போன் பண்ணுறன்
நல்லா சாப்பிட்டு,உடம்பை கவனியுங்க!
கவனிச்ச உடம்பு இப்ப கிடைக்காம போச்சே!
ஏய்!இந்த லொள்ளுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.
சரி,சரி உன் கணவர் வந்திருவேர் ரெடியாகு!
ஆகா,உங்கட இந்தப்பேச்சாலே தானே என் மனசை தந்தேன்,
இப்ப கூட என் மனசு உங்களிட்டத்தானே இருக்கு.
இருந்துதான் என்னை கூறுபோடுது.சும்மா போடி!
நான் இப்ப போனை வைக்கிறன் இரவு 12மணிக்கு அடிக்கிறன் ஓகே.
ஓகே,ஓகே bye.