சனி, ஜூன் 25, 2011

நினைவு சுமந்து தவிக்கிறோம்!

எமை சுமக்க:15.03.1927 நாம் துயர் சுமக்க:30.06.2009
புளியங்கூடல் ஊர்காவற்றுறையை சேர்ந்த
திருவாளர் கந்தையா பசுபதி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

நெஞ்சம் பதறுது!ஈராண்டாக கண்கள் நீர் சொரியுது!
தந்தையே உங்கள் நினைவினில் நாளும்
கனவுகள் கொல்லுது!
எம்மை தோளில் போட்டு வளர்த்த எம் தந்தையே!
உங்களை தோள் சுமக்க முடியாத பாவிகளானோம்!
இறுதிக் கணத்திலும் எம் நினைவுடன்தான் நீங்கள்
கண் துயின்றிருப்பீர்கள் என்பது எமக்கு புரியும் தந்தையே!
எமக்கு நீங்கள் பாலூட்டி வளர்த்ததை விடவும்
பாசத்தை ஊட்டி வளர்த்ததுதான் அதிகம் தந்தையே!
அந்த கொடிய காலனால் உங்கள் உடலை எம்மிடத்திலிருந்து
பிரிக்க முடிந்ததே தவிர,உங்கள் உயிரும் நீங்கள்
ஊட்டிய பாசமும் என்றும் எங்களுடன்தான் பிணைந்திருக்கிறது!
இனி எத்தனை எத்தனை ஆண்டுகளாயினும்
தந்தையே நீங்கள் எம்முடன்தான் வாழ்வீர்கள்!
பாசமுடன்:மனைவி கனகம்மா.மற்றும் உங்கள் பிள்ளைகள்.
மருமக்கள்,பேரப்பிள்ளைகள்.
தொடர்புக்கு:பசுபதி ரவி
00492018462661

ஞாயிறு, மே 22, 2011

அம்மா உந்தன் நினைவினில் தவிக்கிறோம்!

இரண்டாம் ஆண்டு நினைவுகள்!
திருமதி.அரியகுட்டி அன்னபூரணம் அவர்கள்.
மண்ணில்:07-11-1940
விண்ணில்:22-05-2009

எத்தனை எத்தனை ஆண்டுகள்
போயினும்,
பெத்தனை உன்னை மறத்தல் முடியுமோ அம்மா!
நித்தமும் வேகிறோம்!வாடித் துடிக்கிறோம்!
அரவணைக்க தாயின்றி நாளும் அழுகிறோம்!
மீண்டும் ஒரு முறை பிறந்து வா அம்மா!
எங்கள் துயர்தனை போக்கிடு அம்மா!
தந்தையை பிரிந்து தவித்திருந்த வேளையிலே,
எங்களுக்கு துணையுண்டு எனக்கருதி
தந்தைக்கு துணையாக சென்றாயோ அம்மா!
எப்படி மறப்போம்?யார்க்கெடுத்து உரைப்போம்?
அம்மா நீயே வந்திடு தாயே!
அம்மாவின் பிரிவால் துயருறும்:
மக்கள்.மருமக்கள்.பேரப்பிள்ளைகள்.
மற்றும் உடன் பிறப்புக்கள்.
உறவுகள்.
சுழிபுரம்.

புதன், மார்ச் 02, 2011

நண்பனின் இழப்பு பேரிழப்பு!

வாழ்க்கை பல இன்னல்கள்,இடையூறுகளை தாண்டி பயணிக்க வேண்டிய ஒரு
பாய் மரக்கப்பல் போன்றது,எல்லாவற்றையும் தாண்டி வந்த பிறகும் கூட மனிதன்
நிம்மதியாக வாழ முடிவதில்லை,காரணம் அவனது நேசங்களின் பிரிவு.
பிரிந்தோர் இணைந்து விடலாம் என்ற நம்பிக்கை உண்டு,ஆனால் இழந்தோரை
எண்ணி எண்ணி மனம் படும் பாடு பெரும்பாடு.
இந்த இழப்புக்களிலே நண்பர்களின் இழப்பும் பெரும் துன்பத்தை ஏற்படுத்தி விடுகிறது.
நாம் எந்த இரகசியத்தையும் நண்பர்களிடத்தில் மறைப்பதில்லை,ஆறுதல் தேடிச்செல்லும்
ஆலயம் நண்பர்கள் என்றுதான் நான் சொல்வேன்.அந்த வகையிலே கொழும்பில் நான்
வசித்தபோது எனக்கு மிகவும் ஆறுதலாகவும்,உதவியாகவும் இருந்தவர் அன்பு நண்பர்
"தாஸ்"இருந்தாலும் அவருடனான தொடர்புகள் எனக்கு இல்லாமலிருந்தது.ஆனால்
பெரும் துயர் என்னவென்றால் இன்று எனது நண்பியொருவருடன் தொடர்பு கொண்டபோது
அவர் சொன்ன விடையம் என்னை கலங்கடித்தது,உங்கள் நண்பர் தாஸ் இறந்து விட்டார்
என்றும் இப்போ ஒருவருடம் இருக்கும் என்று நண்பி சொன்னபோது என்னால் தாங்கிக்
கொள்ளவே முடியவில்லை.சில நேரங்களில் பண உதவி கூட செய்திருக்கிறார்.
என்னில் அவரது குடும்பமே மிகவும் நம்பிக்கையுடையதாக விளங்கியது என்னால்
மறக்க முடியாதது.சில நேரங்களில் எனக்கு சொல்வார் "டேய் நேற்று எனக்கு செலவுக்கு
காசில்லை,மனிஷியிட்ட கேட்டால் தரமாட்டா,அதால உனக்கு என்று சொல்லிக்கேட்டன்
தந்திற்றாடா!இப்ப அடிக்கடி உன்ர பேரை சொல்லித்தான் மனுஷியிட்ட காசு வாங்கிறன்,
உனக்கென்று சொன்னா ஒன்றும் கதைக்காமல் தந்திருவா"நான் அவரை ஏசினேன் ஏன்
இப்படிச்செய்றீங்கள்?பிறகு என்னையெல்லோ தப்பா நினைப்பா என்றேன்,"சீ அப்படி
ஒன்றும் நினைக்க மாட்டா"என்றார் தாஸ்.
எனக்கு மிகவும் உதவியாக இருந்த நண்பனின் தொடர்பு இன்றிப்போனதும்,இப்போ
கிடைத்த அவரது பிரிவுச்செய்தியும் எனக்கு பெரும் துயரச்செய்தியே!
மானிப்பாயை சேர்ந்த தாஸ்,ஊர்காவற்றுறையைச் சேர்ந்தவரை மணம் முடித்திருந்தார்.
அவரது இழப்பு என்றென்றும் சுமைகளே!

ஞாயிறு, பிப்ரவரி 13, 2011

மறக்க முடியாத நண்பி!

இப்போ நான் சொல்லப் போறதும் ஒரு நண்பியை பற்றியது,அவரது பெயர் சயிலா,மிகவும் நல்ல மனம் படைத்தவர்,என்னதான் சொன்னாலும் சிரித்துக் கொண்டே இருப்பார்.சோகம் என்னவென்றால் இள வயதிலேயே உலகை வெறுத்து சென்று விட்டார்.அவர் எனது ஞாபக பதிவேட்டில் எழுதிய வசனம் என்றைக்குமே என்னால் மறக்க முடியாது.அது என்னவெனில்,
பார்த்தால் பழகாதே,

பழகினால் பிரியாதே,

பிரிவது என்றால் வாழாதே,

வாழ்வது என்றால் சாகாதே,

செத்தாலும் மறக்காதே.

இந்த பொன் எழுத்துக்களை பதித்த இரண்டு,மூன்று மாதங்களிலேயே திடீர் சுகவீனம் ஏற்பட்டு அவர் யாவரையும் பிரிந்து விட்டார்.ஆனாலும் அவரது ஞாபகங்கள் என்றும் மனதில் நிலைத்திருக்கிறது.அவரின் ஞாபகங்களுடன் மனக்கதவு என்றும் திறந்திருக்கும்.(சயிலாவின் சொந்த இடம்:இருபாலை.)

வெள்ளி, பிப்ரவரி 11, 2011

தமிழன்!

தாயின்மேல் ஆணை! தந்தைமேல் ஆணை!
தமிழகமேல் ஆணை!
துாயஎன் தமிழ்மேல் ஆணையிட்டே நான் தோழரே உரைக்கின்றேன்;
நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார்
நலிவதை நான் கண்டும்,
ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி
உழைத்திட நான் தவறேன்.
தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன்
தாய்தடுத் தாலும் விடேன்!
எமைநத்து வாயென எதிரிகள் கோடி
இட்டழைத் தாலும் தொடேன்!
தமக்கொரு தீமை. என்று நற்றமிழர்
எனைஅழைத்திடில் தாவி
இமைப்பினில் ஓடித் தரக்கடவேன் நான்
இனிதாம் என் ஆவி!
மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு
வாழ்ந்த என் மற வேந்தர்
பூனைகள் அல்லர்; அவர்வழி வந்தோர்
புலிநிகர் தமிழ் மாந்தர்!
ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்!
ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்
குவப்புடன் நான் சேர்ப்பேன்.

வியாழன், நவம்பர் 04, 2010

இரண்டாம் ஆண்டு துயர் சுமந்த நினைவுகள்!


சுழிபுரத்தை பிறப்பிடமாகவும்,வாழ்விடமாகவும் கொண்டிருந்த திருவாளர்
நாகலிங்கம் அரியகுட்டி அவர்களின் இரண்டாம் ஆண்டு துயர் சுமந்த நினைவுகள்!
12-11-2008 ல் எமை விட்டுப்பிரிந்த எமது அன்புத்தந்தையின் நினைவுகளால்
நாளெல்லாம் வேதனையில் தவித்துக்கொண்டிருக்கிறோம்,தந்தையே ஆண்டிரண்டென்ன,நூறுகள் கடந்தாலும் எம் உயிர் உள்ளவரை உங்கள் நினைவுகள் எம் நெஞ்சமதில் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும்.எம்மை பூமிக்கு கொண்டுவந்த நீங்கள்,பூமியை விட்டு சென்றதுதான் ஏனோ?தவிக்கின்றோம் தந்தையே!எம் மனங்கள் இனி எப்போதும் ஆறாது!உங்கள் ஒவ்வொரு செயலும் எம் மனத்திரையில் படமாக ஓடிக்கொண்டே இருக்கிறது!எம் மனம் வாடிக்கொண்டேயிருக்கிறது!என்றென்றும் உங்கள் நினைவுகளுடன்,உங்கள் குடும்பத்தினர்கள்.

சனி, செப்டம்பர் 25, 2010

பாவலர் சத்தியசீலன்.

பாவலர் சத்தியசீலன் அவர்களுடன் ஒருசில மாதங்களே பழகி
இருந்தாலும்,அந்த நாட்கள் அத்தனையும் விலைமதிக்க முடியாத
நாட்கள் என்றே கூறலாம்.அவரது பேச்சிலே எப்பொழுதும்
கவிநயம் தவழ்வதை காணமுடியும்,நகைச்சுவை ததும்ப அவர்
பேசும் பேச்சு இவை எல்லாம் மனக்கண் முன் அப்படியே இன்னும்
நினைவில் நிழலாடுகின்றது.
ஒரு அற்புதமான மனிதரை நாம் இழந்து ஆண்டுகள் சில கழிந்து
விட்டபோதும் அவரின் பிரிவை நான் அறிந்திருக்கவில்லை,இப்போ
தற்செயலாக அல்லைப்பிட்டி இணையத்தை பார்த்தபோது நான்
அதிர்ந்தே விட்டேன்,
எனது(ஆட்டோ கிராப்)ஞாபகப்பதிவேட்டில் அவரது பதிவையும் இடுமாறு
நான் சொன்னபோது அவர் எழுதிய வார்த்தைகள்"ஞாயிறு வேந்தன் உந்தன்
நற்றமிழ் வெல்க"என்ற வாசகம் என்மனவேட்டிலும் பதிந்து விட்ட ஒன்று.
நான் புதுக்கவிதை எழுதும் ஒரு சாதாரணமானவன்.ஆனால் பெயர் வாங்கும்
அளவிற்கு எதையும் செய்தவன் இல்லை,இருந்தாலும் பாவலர் சத்திய சீலன்
அவர்கள் என்னை கவிஞர் என்றே அழைப்பார்,பெருமை இல்லாதவர்
அதனால் தானோ என்னவோ யாழ்,புத்திசாலிகள் அவரை பெருமைப்படுத்த
தவறி விட்டார்கள்,
நான் அவருக்கு மகன் மாதிரி இருந்தபோதும் அதையெல்லாம் விட்டு
தனது பள்ளிப்பருவ காதல் கதைகளையெல்லாம் மிகவும் நகைச்சுவையாக
சொல்லிய விதம்,நாங்கள் சிரித்த சிரிப்புக்கள் இன்னும் மனக்கண் முன்னே
நீண்டு விரிந்துகொண்டு செல்கிறது.
அவரை தனியாக காண்பதிலும் காரைநகர் மதுரகவி எம்,பி,அருளானந்தம்
அவர்களுடன் காண்பதே அதிகம்,அந்தளவிற்கு இருவரும் ஒற்றுமையுடன்
விளங்கினார்கள்.
பாவலர் சத்தியசீலன் அவர்கள் என் மனதுள்ளவரை நினைவில் மறையாமல் வாழ்வார்.