ஞாயிறு, அக்டோபர் 09, 2011

நினைவுகளை நிலைக்க வைத்தவர்!

என்றும் மறக்க முடியாத பல நன்மைகள் புரிந்து மக்கள் மனதில் நினைவுகளை நிலைக்க வைத்தவர்கள் பலர்,அந்த பலரில் ஒருவராக எம் மனதில் நிலைத்து விட்டவர் என்.ஆர்.என யாவராலும் அறியப்பட்ட திரு, நாகலிங்கம் இரத்தினம் அவர்கள்!புளியங்கூடல் ஸ்ரீ மகாமாரி அம்பாள் மீது தீராத பக்திகொண்டு சேவை புரிந்தவர்.நல்ல பண்பும் இரக்ககுணமும் கொண்டவர்.உதவி என்று வருவோர்க்கு முடிந்தளவு உதவிகளை செய்ய பின்னிற்காத மனிதர் அவர்.புளியங்கூடல் வேலணை என்ற கிராமங்களை இணைக்கும் பாலமாக விளங்குகிறது அவரது இல்லம்.அவர் நம்மிடையே இன்று இல்லை என்று நினைக்க தோன்றவில்லை! அவரது பண்புகள் அவரை நிலைக்க வைத்திருக்கிறது என்பதே உண்மை!உலகுள்ளவரை அவரது நினைவுகளும் வாழும்.

சனி, அக்டோபர் 01, 2011

நீ வீழவில்லை அண்ணா என் மனதில் வாழ்கிறாய்!

ஓ.....மரணம் வாசல்தேடி வருமுன்னே
மரணத்தின் வாசல் கதவை தட்டியவனே!
அண்ணணே.....................
என் வாழ்விற்கு ஒளியூட்டிய வழிகாட்டியே!
வாடாமலர் போல வாழ்ந்து புகழ் எடுக்க
போடா தம்பியென்று புயம் கொடுத்து தூக்கியவனே!
அந்த நாள் ஞாபகத்தை அடிமனதில் சுமந்து கொண்டு
வெந்தணலில் வீழ்ந்து விட்ட புழுவாகி துடிக்கின்றேன்!
மூத்தவனாய் குடும்பத்தை முன்னின்று காத்தவன் நீ!
நோய்கள்,துன்பங்கள் பாடாய் படுத்தியபோதெல்லாம்
பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் எழுந்தவன் நீ!
அரச பதவியில் அறுபதுகளில் இணைந்து கொண்டு
குடும்ப விளக்கை குன்றின்மேல் ஏற்றியவன் நீ!
ஒடுக்கு முறைகளை ஒதுக்கி புறம்தள்ளி
மிடுக்காய் நடந்து எம்மை மேன்நிலை படுத்தியவன் நீ!
பணந்தான் உலகென்று பதறியடிக்கும் உறவுக்குள்ளே
குணந்தான் பெரிதென்று குரல் கொடுத்த குணாளன் நீ!
எப்படியும் வாழலாம் என்பதை விடுத்திங்கு
இப்படித்தான் வாழவேண்டுமென வீறாப்பு கொண்டவன் நீ!
என் ஆருயிர் அண்ணாவே...................!!!
நெஞ்சில் ஈரம் இருந்தும் கடைசிவரை அழுதுவிட
என் கண்களில் ஈரமில்லையே.......
நீ வீழ்ந்தாய் என்றாலும்,
இறுதிவரை என் நெஞ்சில் வாழ்வாய் நான் வீழும்வரை.
(திரு.வீரகத்தி நாகமுத்து அவர்களின் மறைவையொட்டி,அவரின் நினைவாக இது பிரசுரமாகிறது)
ஆக்கம்:(சகோதரர்)வீ.குமரன் ஆசிரியர்.

வெள்ளி, செப்டம்பர் 30, 2011

மரண அறிவித்தல்!

திரு.வீரகத்தி நாகமுத்து அவர்கள்
(ஓய்வுபெற்ற சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரதம எழுதுவினையர்)
பிறப்பு : 29 செப்ரெம்பர் 1940 — இறப்பு : 29 செப்ரெம்பர் 2011
நாரந்தனை தெற்கை பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய் மத்தியை வதிவிடமாகவும் கொண்ட வீரகத்தி நாகமுத்து அவர்கள் 29-09-2011 வியாழக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வீரகத்தி, முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிராசா மற்றும் கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற விசாலாட்சி சரவணபவன்(முன்னாள் உப அதிபர் றோ.க.க.பாடசாலை - சரவணை), காலஞ்சென்ற சண்முகலிங்கம்(பிரதேசசபை முன்னாள் பிரதம எழுதுவினைஞர் - வெண்கலச்செட்டிக்குளம்), காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகரத்தினம், மற்றும் அருளானந்தசிவம்(இத்தாலி), குமரகுருபரன்(கணித ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
யாழினி(பிரதேச செயலகம் - சண்டிலிப்பாய்), கமலினி(இத்தாலி), வாசுகி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயகாந்தன்(மக்கள் வங்கி – யாழ்ப்பாணம்) , இளங்கோவன்(இத்தாலி), உதயராஜ்(கிராமசேவகர் - புங்குடுதீவு) ஆகியோரின் அன்பு மாமாவும்,
சாகித்தியா, சரனியா, இலக்கியா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-10-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்து முறைப்படி நடைபெற்று, சண்டிலிப்பாய் பிப்பிலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்.
குமரன் ஆசிரியர் (சகோதரர்)இத்தாலி
தொலைபேசி:
00393317519795

ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

சிறந்த பண்பாளர் கார் மாமா!

புளியங்கூடலை சேர்ந்த நாகலிங்கம் சண்முகநாதன் அவர்களை அறியாதவர்கள் இருக்க முடியாதென்றே சொல்லலாம்.இவரை நாம் கார் மாமா என்றே அழைப்பது வழக்கம்.அநேகமானவர்கள் அப்படித்தான் அழைத்தார்கள்.எமது ஊரில் அதாவது புளியங்கூடலில் முன்பு வாகன வசதிகள் குறைவாகவே இருந்தது.(இப்போ எப்படி என்று தெரியவில்லை)ஆனால் எனக்கு தெரிந்த நாளிலிருந்து கார் மாமாவை காருடன்தான் பார்த்திருக்கிறேன்.எங்கள் ஊருக்கு அம்புலன்ஸ் இல்லாத குறையை போக்கியவர் கார் மாமா என்றுதான் நான் சொல்வேன்.எந்த வீட்டில் கூக்குரல் சத்தம் கேட்டாலும் எந்த சாமமாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உடனடியாக அங்கே சென்று பணத்தை பற்றியெல்லாம் யோசிக்காமல் நோயாளியை மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சேர்ப்பிப்பதுடன் வீட்டிற்கும் போய் தகவல் சொல்லி விட்டு செல்லும் சிறந்த பண்பாளர் கார் மாமா.உதவி புரிவதில் ஒரு கொடையாளனாகவே திகழ்ந்தவர்.எல்லோருடனும் மிகவும் பண்பாக பழகும் நற்குணமும் அவரிடம் இருந்த சிறப்புக்கு எடுத்துக்காட்டாகும்.ஊரில் இருந்து இடம் பெயர்ந்து அவர் கொழும்பில் வசித்து வந்தார். நான் கொழும்பில் இருந்த நேரங்களில் அவர்களை போய் சந்திப்பது வழக்கம்.ஆனால் இன்று நம்மையெல்லாம் விட்டு அவர் வெகு தூரம் சென்று விட்டார் என்றபோதும்,அவரது நினைவுகளும் அவர் ஆற்றிய நன்மைகளும் என்றும் எம்முடன் கலந்திருக்கும் என்பதே உண்மை!அந்த வகையிலேதான் அவரது நீங்கா நினைவுகளை மனக்கதவூடாக புளியங்கூடல் மக்கள் சார்பில் கார் மாமாவிற்காக சமர்ப்பிர்கின்றேன்.

சனி, ஜூன் 25, 2011

நினைவு சுமந்து தவிக்கிறோம்!

எமை சுமக்க:15.03.1927 நாம் துயர் சுமக்க:30.06.2009
புளியங்கூடல் ஊர்காவற்றுறையை சேர்ந்த
திருவாளர் கந்தையா பசுபதி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

நெஞ்சம் பதறுது!ஈராண்டாக கண்கள் நீர் சொரியுது!
தந்தையே உங்கள் நினைவினில் நாளும்
கனவுகள் கொல்லுது!
எம்மை தோளில் போட்டு வளர்த்த எம் தந்தையே!
உங்களை தோள் சுமக்க முடியாத பாவிகளானோம்!
இறுதிக் கணத்திலும் எம் நினைவுடன்தான் நீங்கள்
கண் துயின்றிருப்பீர்கள் என்பது எமக்கு புரியும் தந்தையே!
எமக்கு நீங்கள் பாலூட்டி வளர்த்ததை விடவும்
பாசத்தை ஊட்டி வளர்த்ததுதான் அதிகம் தந்தையே!
அந்த கொடிய காலனால் உங்கள் உடலை எம்மிடத்திலிருந்து
பிரிக்க முடிந்ததே தவிர,உங்கள் உயிரும் நீங்கள்
ஊட்டிய பாசமும் என்றும் எங்களுடன்தான் பிணைந்திருக்கிறது!
இனி எத்தனை எத்தனை ஆண்டுகளாயினும்
தந்தையே நீங்கள் எம்முடன்தான் வாழ்வீர்கள்!
பாசமுடன்:மனைவி கனகம்மா.மற்றும் உங்கள் பிள்ளைகள்.
மருமக்கள்,பேரப்பிள்ளைகள்.
தொடர்புக்கு:பசுபதி ரவி
00492018462661

ஞாயிறு, மே 22, 2011

அம்மா உந்தன் நினைவினில் தவிக்கிறோம்!

இரண்டாம் ஆண்டு நினைவுகள்!
திருமதி.அரியகுட்டி அன்னபூரணம் அவர்கள்.
மண்ணில்:07-11-1940
விண்ணில்:22-05-2009

எத்தனை எத்தனை ஆண்டுகள்
போயினும்,
பெத்தனை உன்னை மறத்தல் முடியுமோ அம்மா!
நித்தமும் வேகிறோம்!வாடித் துடிக்கிறோம்!
அரவணைக்க தாயின்றி நாளும் அழுகிறோம்!
மீண்டும் ஒரு முறை பிறந்து வா அம்மா!
எங்கள் துயர்தனை போக்கிடு அம்மா!
தந்தையை பிரிந்து தவித்திருந்த வேளையிலே,
எங்களுக்கு துணையுண்டு எனக்கருதி
தந்தைக்கு துணையாக சென்றாயோ அம்மா!
எப்படி மறப்போம்?யார்க்கெடுத்து உரைப்போம்?
அம்மா நீயே வந்திடு தாயே!
அம்மாவின் பிரிவால் துயருறும்:
மக்கள்.மருமக்கள்.பேரப்பிள்ளைகள்.
மற்றும் உடன் பிறப்புக்கள்.
உறவுகள்.
சுழிபுரம்.

புதன், மார்ச் 02, 2011

நண்பனின் இழப்பு பேரிழப்பு!

வாழ்க்கை பல இன்னல்கள்,இடையூறுகளை தாண்டி பயணிக்க வேண்டிய ஒரு
பாய் மரக்கப்பல் போன்றது,எல்லாவற்றையும் தாண்டி வந்த பிறகும் கூட மனிதன்
நிம்மதியாக வாழ முடிவதில்லை,காரணம் அவனது நேசங்களின் பிரிவு.
பிரிந்தோர் இணைந்து விடலாம் என்ற நம்பிக்கை உண்டு,ஆனால் இழந்தோரை
எண்ணி எண்ணி மனம் படும் பாடு பெரும்பாடு.
இந்த இழப்புக்களிலே நண்பர்களின் இழப்பும் பெரும் துன்பத்தை ஏற்படுத்தி விடுகிறது.
நாம் எந்த இரகசியத்தையும் நண்பர்களிடத்தில் மறைப்பதில்லை,ஆறுதல் தேடிச்செல்லும்
ஆலயம் நண்பர்கள் என்றுதான் நான் சொல்வேன்.அந்த வகையிலே கொழும்பில் நான்
வசித்தபோது எனக்கு மிகவும் ஆறுதலாகவும்,உதவியாகவும் இருந்தவர் அன்பு நண்பர்
"தாஸ்"இருந்தாலும் அவருடனான தொடர்புகள் எனக்கு இல்லாமலிருந்தது.ஆனால்
பெரும் துயர் என்னவென்றால் இன்று எனது நண்பியொருவருடன் தொடர்பு கொண்டபோது
அவர் சொன்ன விடையம் என்னை கலங்கடித்தது,உங்கள் நண்பர் தாஸ் இறந்து விட்டார்
என்றும் இப்போ ஒருவருடம் இருக்கும் என்று நண்பி சொன்னபோது என்னால் தாங்கிக்
கொள்ளவே முடியவில்லை.சில நேரங்களில் பண உதவி கூட செய்திருக்கிறார்.
என்னில் அவரது குடும்பமே மிகவும் நம்பிக்கையுடையதாக விளங்கியது என்னால்
மறக்க முடியாதது.சில நேரங்களில் எனக்கு சொல்வார் "டேய் நேற்று எனக்கு செலவுக்கு
காசில்லை,மனிஷியிட்ட கேட்டால் தரமாட்டா,அதால உனக்கு என்று சொல்லிக்கேட்டன்
தந்திற்றாடா!இப்ப அடிக்கடி உன்ர பேரை சொல்லித்தான் மனுஷியிட்ட காசு வாங்கிறன்,
உனக்கென்று சொன்னா ஒன்றும் கதைக்காமல் தந்திருவா"நான் அவரை ஏசினேன் ஏன்
இப்படிச்செய்றீங்கள்?பிறகு என்னையெல்லோ தப்பா நினைப்பா என்றேன்,"சீ அப்படி
ஒன்றும் நினைக்க மாட்டா"என்றார் தாஸ்.
எனக்கு மிகவும் உதவியாக இருந்த நண்பனின் தொடர்பு இன்றிப்போனதும்,இப்போ
கிடைத்த அவரது பிரிவுச்செய்தியும் எனக்கு பெரும் துயரச்செய்தியே!
மானிப்பாயை சேர்ந்த தாஸ்,ஊர்காவற்றுறையைச் சேர்ந்தவரை மணம் முடித்திருந்தார்.
அவரது இழப்பு என்றென்றும் சுமைகளே!